மகன் இறந்த தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் தந்தை.. காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக EVKS இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தனது 46 வயதில் உயிரிழந்தார்.
இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
திருமகன் ஈவெராவின் இயற்பெயர் ராம். இவர் பெரியாரின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் கொள்ளுப்பேரனும் அவர் மகன் ஈ. வி. கே. சம்பத்தின் பேரனும் ஆவார். அந்த வகையில் திருமகன் ஈவெரா பெரியாரின் கொள்ளுப் பேரன் ஆவார்.
இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தவர். மேலும் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தவர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.
திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மகன் இறந்த பிறகு நடக்கும் இடைத் தேர்தலில் தந்தை போட்டியிட உள்ளது பலரது கவனத்தை ஈரோடு கிழக்கு தொகுதியின் மீது குவித்துள்ளது.
மற்ற செய்திகள்