'முழு ஊரடங்கு' அமலுக்கு வந்தது... கடைக்கு கூட 'நடந்து தான்' செல்ல வேண்டும்... 'வண்டி பத்திரம்...' 'மீறினால் பறிமுதல்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
நட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கொரோனா பரவல் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அன்று மாலையில் அமைச்சரவையை கூட்டிய ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி, இந்த 4 மாவட்டங்களிலும் 19-ந் தேதி (இன்று) முதல் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி சென்னை நகரிலும் அதையொட்டி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் செயல்படவும், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள், ஆட்டோ, டாக்சி போன்றவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் பிற இடங்களுக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் செல்ல முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் மக்கள், தங்கள் பகுதிகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட விரும்புபவர்கள், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கே உணவை வரவழைத்து வாங்கிக்கொள்ளலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.
முழு ஊரடங்கை யொட்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனத் தெரிவித்துள்ளார்.
"சென்னை நகர எல்லையை தாண்டி பணிக்கு செல்லும் ஊழியர்கள் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவன காவலாளிகள் உரிய சீருடை அணிந்து சென்றால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS