"1500 படம் பண்ணிருக்கேன். நான் சொல்றேன்".. வெற்றிமாறன் குறித்து இளையராஜா.. ஆர்ப்பரித்த அரங்கம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலை
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
துணைவன்
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
டிரெய்லர்
இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இளையராஜா
இதனிடையே இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இயக்குநர் வெற்றிமாறன் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்,"இந்த படம் இதுவரையில் திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கின்ற படமாக இருக்கும். அவருடைய ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு விதமானவை. கடலில் ஒரு அலை போனால் அடுத்த அலை வரும். ஆனால், ஒவ்வொரு அலையும் வித்தியாசமானது. அப்படிதான் அவருடைய திரைக்கதையும். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. திரையுலகிற்கு அவர் முக்கியமான இயக்குநர் என்பதை இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 1500 படம் பண்ண அப்புறம் இதை சொல்றேன்னா நீங்க புரிஞ்சுக்கணும். 1000க்கு விழா எடுத்தோம், இப்போ 500 சேர்ந்திடுச்சு. 1500 இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். வெற்றிமாறன் திரைத்துறையின் முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள்" என்றார். அப்போது அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அந்த தருணத்தை கொண்டாடினர்.
மற்ற செய்திகள்