நாங்க பொங்கலும் கொண்டாடுவோம், அக்யூஸ்ட்டுக்கு பொங்கலும் வைப்போம்.. அதிரவைத்த ஐஜி
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நாங்கள் இப்படி தான் பொங்கல் கொண்டாடுவோம் என மத்திய மண்டல ஐ.ஜி, தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில், கிடந்த சில ஆண்டுகளாகவே, பல மாவட்டங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இளைஞர்களும், இந்த தவறான போதை பழக்கத்திற்கு அடிமையாகி போகிறார்கள்.
இதனைத் தடுக்க, போலீசாரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, தனிப்படைகள் அமைத்தும், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் பிடித்து வருகிறார்கள்.
பறிமுதல்
இந்நிலையில், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்து, தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 170 கிலோ கஞ்சாவை நாகப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த மாவட்டத்தின் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தீவிர சோதனை
அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு வாகனங்களை பரிசோதனை செய்த போது, கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. மேலும், அந்த வாகனத்தில் இருந்த 9 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.
பாராட்டு
இதனையடுத்து, கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த போலீசாரை மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் பாராட்டி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பொங்கல் என்பதால், நாங்கள் மிகவும் பிசியாக இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் பொங்கல் கொண்டாடவும் செய்வோம். அக்யூஸ்ட்டுக்கு பொங்கலும் வைப்போம்.
ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து, சுமார் 170 கிலோ கஞ்சாவை, கடத்தி வந்த கடத்தல்காரர்களைக் கைது செய்த நாகப்பட்டினம் எஸ்.பி ஜவஹர் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்' என புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
They thought we will be busy with Pongal. But we proved:பொங்கல் கொண்டாடவும் செய்வாம்; உங்களுக்கு( accused) பொங்கலும் வைப்போம். Congrats to Nagai SP Jawahar IPS & team for seizing 170 kg ganja with two smugglers from AP and 4 from Kerala. @CMOTamilnadu @tnpoliceoffl @copmahesh1994 pic.twitter.com/vM1blwD5Pc
— Balakrishnan IPS (@ipspolicetn) January 18, 2022
திறமையான செயல்பாடு
தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டி, போலீசார் மிகவும் திறமையுடன் செயல்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரிகளுக்கு பொது மக்களும், தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்