'வேறு மாவட்டத்துக்கு கூட்டிச் சென்று'.. 'கணவர் செய்த காரியம்'.. 'மணமாகி ஒரே வருஷத்தில்' இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விராலிமலையில் மனைவியை எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவரது கணவர் விருதுநகரில் இன்று கைது செய்யப்பட்டார்.
விருதுநகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியின் 20 வயது மகளான பானுரேகா என்பவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது அத்தை மகனான 26 வயதான ராஜ்குமார் என்பவரை மணந்தார். அதன் பின்னர் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு உண்டானது. அதன் பின்னர் ஒருநாள் கல்லூரிக்குச் சென்ற பானுரேகா வீடு திரும்பவில்லை. அவரது தோழிகளிடம் விசாரித்தபோது, விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு தனது கணவர் ராஜ்குமாரைப் பார்ப்பதற்காக பானுரேகா சென்றதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பானுரேகாவை காணவில்லை என்று அவரது தந்தை அழகர் கொடுத்த புகாரை போலீஸார் விசாரித்து வந்தனர். இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் திருச்சி அருகே விராலிமலை காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சடலம் கிடைத்தது. இதனையடுத்து காணாமல் போனவர்களின் விபரங்களை வைத்து விராலி மலை போலீஸார் விசாரித்தபோது விருதுநகரில் காணாமல் போன பானுரேகாவை பற்றி அறிந்துள்ளனர். பின்னர் விருதுநகர் போலீஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விசாரிக்கப்பட்டு இந்த கொலைவழக்கில் பானுரேகாவின் கணவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
விசாரணையில் தங்களுக்கு குழந்தை பிறக்காத காரணத்தால் அதிருப்தி அடைந்த ராஜ்குமார் தன் மனைவி பானுரேகாவை விராலிமலைக்கு அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து கொன்று எரித்துவிட்டதாக ராஜ்குமார் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.