'இப்படி ஒரு ஆஃபர் போட்டா பிரியாணி லவ்வர்ஸ் சும்மா இருப்பாங்களா'... 'ரவுண்ட் கட்டிய வாடிக்கையாளர்கள்'... காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாகப் பல தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பலரும் வாடிக்கையாளர்களைக் கவரப் பல கவர்ச்சிகரமான ஆஃபர்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அறிவிக்கப்பட்ட ஆஃபர் என்ன நிலைக்குக் கொண்டு சென்று விட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக தனியார் உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. புதிதாகத் திறக்கப்பட ஹோட்டல் என்பதால் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இன்று 'ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்' என விளம்பரம் செய்திருந்தது. இந்த விளம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பரவிய நிலையில், முதல் ஆளாகப் பிரியாணியை வாங்கி விட வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல், முகக்கவசம் கூட அணியாமல் அந்த உணவகத்தின் முன் குவிந்தனர்.
உணவகத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும் பிரியாணியை வாங்கி சுவைக்கப் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கூட்டமாக உள்ளே நுழைந்து, கொரோனாவை மறந்து, தனிமனித இடைவெளியை மறந்து, பிரியாணி வாங்கிச்சென்றனர். இந்த சம்பவத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அரசு, பள்ளி, கல்லூரிகள், பொது போக்குவரத்து மற்றும் திரையரங்குகளைத் திறக்காமல் இருக்கிறது.
பிரியாணி வாங்குவதற்காக கொரோனா குறித்து கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உணவகங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளதோடு, இந்த கட்டுப்பாடுகளைப் பலரும் பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதுபோன்ற கவர்ச்சியான விளம்பரத்தை அறிவித்த அந்த உணவகம் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற எந்த எச்சரிக்கையும் செய்யாதது தான் பெரும் வேதனையான விஷயம் எனக் கூறியுள்ள சமூக ஆர்வலர்கள், இதுபோன்று தங்களின் சுயலாபத்திற்காக அரசின் வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்