குழந்தை சுஜித்தை மீட்க 11 கோடியா?.. உண்மை இதுதான்... அதிகாரப்பூர்வ விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் மீட்பு பணிகளுக்கு 11 கோடி ரூபாய் வரை செலவானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில் சுஜித் மீட்பு பணிகளுக்கு ஆன செலவு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தை சுஜித்தை மீட்க 11 கோடியா?.. உண்மை இதுதான்... அதிகாரப்பூர்வ விளக்கம்!

மேலும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ந்தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நான் நேரில் சென்றேன். சிறுவனை மீட்கும் பணியை தீவிரப்படுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருகிலேயே இருந்து கண்காணிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் பூமிக்கடியில் உள்ள பாறை அதிக கடினத்தன்மையுடையதாக இருந்ததால் எல்அன்டி நிறுவனத்திடம் உதவி கோரியவுடன் அவர்களும் உடனடியாக சம்மதித்து மீட்பு பணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டு மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

எல்அன்ட்டி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் இதுவரை எந்தவிதமான செலவுத்தொகையையும் கோரவில்லை. அதுபோல் என்.எச்.ஏ.ஐ., கே.என்.ஆர். நிறுவனம், உள்ளூர் பொக்லைன் எந்திர ஆப்ரேட்டர்களும் எவ்விதமான செலவு தொகையும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

அனைத்து எந்திரங்களுக்கும் 5000 லிட்டர் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் தொகை ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. எனவே சமூக வலைதள செய்திகள் மற்றும் பொய்யான செய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம். பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சுஜித்தை மீட்க எந்திரங்கள் வழங்கி உதவியவர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் உதவிய அனைவருக்கும் தமிழக அரசின் சார்பாகவும், திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

SUJITH