'கஷ்டப்படுற குடும்பம்னு..'.. 'அவன வேலைக்கு சேர்த்தேன்'.. கடைசியில.. கதறும் வீட்டு 'முதலாளி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள திருவான்மியூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான லியாகத் அலி (வயது 73), தனது வீட்டில் அண்மை காலமாக பணிபுரிந்து வந்த, ஒடிசாவை சேர்ந்த ரவியை நம்பி மொத்த வீட்டையும் ஒப்படைத்துவிட்டு உறவினரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக ஈரோடு வரை சென்றுள்ளார்.
ஊரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த லியாகத் அலிக்கு, அவர் வங்கிக் கணக்கு வைத்திருந்த வங்கியிலிருந்து, போன் வந்தது. அதில், ‘நீங்கள் யாருக்கேனும் இரண்டரை லட்சம் ரூபாய் செக் எழுதி கொடுத்தீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் வங்கி அதிகாரி. அப்போது லியாகத் அலி தான் யாருக்கும் அவ்வாறு எழுதி தரவில்லை என்றும், மேலும் எதனால் இப்படி கேட்கிறீர்கள்? என்றும் விளக்கம் கேட்கும் போது அவருடைய கையெழுத்திட்ட செக்கு ஒன்று வங்கிக்கு வந்ததாகவும், ஆனால் உண்மையில் அவர் கையெழுத்து போல் அல்ல என்கிற சந்தேகத்தாலும், தான் போன் செய்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் அதை ஒரு இளைஞர் எடுத்துக் கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் நழுவி விட்டார் என்றும் வங்கி அதிகாரி பதில் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த லியாகத் அலி, உடனடியாக சென்னைக்கு விரைந்து தன் வீட்டை அடைந்தார். ஆனால் அவரது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, லாக்கரில் இருந்துன் 46 சவரன் நகைகள் மற்றும் அவருடைய செக் புத்தகம் யாவும் திருடு போனதை அவர் கண்டுபிடித்துள்ளார். அதே சமயம் வேலைக்காரர் ரவியையும் காணவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்தால் போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார் லியாகத் அலி. அதன்படி வங்கிக்கு வந்த நபர் யார் என்று போலீசார் சோதனை செய்ததில் அந்த நபர் ரவிதான் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து ரவியை தன்னுடைய வேலையாளாக யார் தன்னிடம் சேர்த்தது என்கிற விவரங்களை லியாகத் அலி போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதை வைத்து ஒடிசாவைச் சேர்ந்த ரவியை போலீசார் தேடி வருகின்றனர். வடமாநிலத்தவரான ரவியின் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டிருந்ததாக ரவி கூறியதால், அவருக்கு நல்ல சம்பளம் கொடுத்து, தனக்கு நம்பிக்கையான ஒருவராக அவரை வைத்திருந்ததாகவும், ஆனால் இப்படி துரோகம் செய்துவிட்டதாகவும் லியாகத் அலி வேதனைப்பட்டுள்ளார்.