‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணை வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தட்டான்குளம் பகுதியை சேர்ந்த 49 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குணமடைந்த அப்பெண் பழனியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் நாச்சிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டிற்குள் பெண்ணை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
தான் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக அப்பெண் தெரிவித்தும், வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் விட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் வீட்டின் வெளியிலேயே வெகுநேரமாக நின்று கொண்டு இருந்துள்ளார். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பழனிச்சாமி, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு வீட்டை காலி செய்வதாக அப்பெண் கூறினார். இதனை அடுத்து அப்பெண்ணை வீட்டிற்குள் நுழைவதற்கு அதன் உரிமையாளர் அனுமதித்தார். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணை வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்