'கொரோனா பாதிப்பு 42 ஆக உயர்வு... ‘10 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு'... 'சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதித்த மாவட்டங்களில் உள்ள வீடுகளில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துதுள்ளார்
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் உட்பட இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “சென்னை, கோவை, வேலூர், சேலம், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள், அது தொடர்பான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த 10 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும். காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். கொரோனா அறிகுறிகள் அதிக நபருக்கு வந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான வசதிகளையும் செய்தி வருகிறோம். தமிழகம் தற்போது 2-வது நிலையில் தான் உள்ளது. மூன்றாவது நிலைக்கு செல்லாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.