‘சட்டையை கிழித்து.. செல்போனை உடைத்து..’ .. ‘கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவக் குழுவினருக்கு’.. ‘நேர்ந்த பரபரப்பு சம்பவம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகிலுள்ள அய்யனார்வூத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அவரை மருத்து பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, சுகாதார அதிகாரிகள் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோரின் உதவியுடன், அந்த ஊரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரின் மகன், இரண்டு மகள்கள், மூத்த மகளின் ஒன்றரை வயதுக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய சென்றனர்.
அப்போது ஆம்புலன்ஸை மறித்துக்கொண்டு மக்கள் பரிசோதனைக்கு அனுமதிக்காததாகவும், அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கிடையே, இங்கிருந்து சென்ற மருத்துவக் குழுவினரில் ஒருவரான வெள்ளாளன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் காளிராஜை அங்கிருந்த சிலர் அடித்து, சட்டையைக் கிழித்து, செல்போனையும் உடைத்து பைக்கையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது. அதன் பின்னர் தாசில்தார் மற்றும் ஊர்மக்களின் ஒத்துழைப்புடன், மருத்துவக் குழுவினர் அந்தக் குடும்ப உறுப்பினர்ளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எனினும் சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஊழியர்கள் கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்ய, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ பணியாளர்கள் வேலைகளை தொடர்ந்தனர்.