"இந்த 5 பேருக்கு எப்படி கொரோனா வந்தது..." "அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்..." 'கண்டறிய' முடியாமல் 'திணறும்' 'சுகாதாரத்துறை...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறித்து விசாரித்ததில் பெரும்பாலானோருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதுகுறித்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் 5 பேருக்கு மட்டும் எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது.
டெல்லி தப்ளிக் ஜாமத் நிகழ்ச்சியில்பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியவர்களை கண்டிறிந்து தமிழக அரசு தனிமைப்படுத்தி விட்டது. ஆனால், கடந்த 10 நாட்களில் பதிவான 5 கொரோனா தொற்று விவகாரத்தில், காரணியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசித்துவந்த உத்தரபிரதேசத்தைச் சேர்நத் 25 வயது ஆணுக்கு கடந்த மார்ச் 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இவர் டெல்லியிலிருந்து கடந்த மார்ச் 12-ம் தேதி, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எஸ் 5 பெட்டியில் பயணித்து சென்னைக்கு வந்தார். அவருடன் தங்கியிருந்த, முடிதிருத்தும் நிலையத்தில் பணியாற்றிய நண்பருக்கும் கொரோனா தொற்று மார்ச் 25-ம் தேதி உறுதியானது.
இவர்களுக்கு டெல்லியில் யாரிடமிருந்து கொரோனா தொற்றியது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இவர்களிடமிருந்து யாரேனும் கொரோனா தொற்று பெற்றார்களா? என்பதையும் இதுவரை அறிய முடியவில்லை. சுகாதாரத்துறை குறிப்புகளின் படி இவர்களோடு தொடர்புடைய 218 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோல், சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய பெண்ணுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 27-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டைச் சேர்ந்த அவருக்கு அவர் பணியாற்றிய வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து தொற்று பரவியதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. உடன் பணியாற்றிய 28 வயது ஆணுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மார்ச் 31 உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீனிக்ஸ் மாலில் கடைசி 10 நாட்களுக்கு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்த 35 வயது ஒப்பந்த பணியாளர் ஒருவருக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கன்னியாகுமரி சென்றவருக்கு கொரோனா எப்படி தொற்றியது என்பது தெரியவில்லை. இவருடன் பணியாற்றியவர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
சென்னை அண்ணா ஆர்ச் அருகில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை வளாகத்தில் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்துவந்த 39 வயது ஆணுக்கு கொரோனா தொற்று மார்ச் 27 அன்று உறுதியானது. அவர் படித்துவந்த விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு யாரிடம் இருந்து வைரஸ் பரவியது என்ற தகவல் இல்லை. நோய் தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன் பிறந்த நாள் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இதே போல் விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான விவகாரத்திலும் மூலம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர், வெளிநாடுகளுக்கோ, வெளியூர் பயணமோ மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த 5 சம்பவங்களில் தொற்றுக்கான மூலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசு நோய்த் தொற்றியவர்களை மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி வருகிறது. அவ்வாறு செய்தால் மட்டும் இந்த நோய் சமூகத் தொற்று என்ற நிலையை அடையாமல் பாதுகாக்க முடியும். அதனால் நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டது, யாருடன் நோயாளிகள் தொடர்பில் இருந்தார்கள் என்பதை எல்லாம் விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த 5 சம்பவங்களின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாததால், வைரஸ் பலருக்கு பரவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.