'கேஸ் சிலிண்டர் விலை ஏற காரணம் இவங்க ''இரண்டு'' பேரு தான்'... பரபரப்பு குற்றசாட்டை சொன்ன ஹெச்.ராஜா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேல் அதிகரித்தது.
இதற்கிடையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை கடைசியாகக் கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் 3 முறை உயர்வு தந்த அதிர்ச்சியிலிருந்து விலகாத பொதுமக்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மேலும் கலக்கமடைந்துள்ளனர். இதனிடையே மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜ.க சார்பில் "வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்" என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பேசிய ஹெச்.ராஜா, ’மு.க.ஸ்டாலின், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோர் தமிழகத்தின் தீய சக்திகள். இவர்கள் அனைவரும் பலூன் விடும் ஸ்கூல் பிள்ளைகள். இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசுத் திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது, எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்துப் பேசிய ஹெச்.ராஜா, ''கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியவர்கள் பொருளாதார மேதையான மன்மோகன் சிங், மற்றும் எங்க ஊர் ப.சிதம்பரம்’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.
மற்ற செய்திகள்