'இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கார்'... 'விடாமல் துரத்தி சென்ற பொதுமக்கள்'... இறுதியாக சிக்கிய காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் ஒரு கார் வேகமாகச் சென்றது. இந்த நேரத்தில் யார் இப்படி வேகமாகச் செல்கிறார் என பொதுமக்கள் பேசி கொண்டிருந்த நேரத்தில், அந்த கார் அங்குள்ள பள்ளி அருகில் பஞ்சர் கடையில் சைக்கிளுக்குப் பஞ்சர் போட்டுக்கொண்டிருந்த வசீம் என்ற வாலிபர்மீது மோதியது.

'இடித்துவிட்டு நிற்காமல் சென்ற கார்'... 'விடாமல் துரத்தி சென்ற பொதுமக்கள்'... இறுதியாக சிக்கிய காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!

ஆனால் கார் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. உடனே அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர். அப்போது 4 கம்பம் தெருவில் பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீதும் அந்த கார் மோதியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் காரை துரத்தினர். 5 கிலோமீட்டர் தூரம் சென்ற கார் மத்தூர் கிராமத்தில் சென்றபோது திடீரென டயர் வெடித்து அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் மோதி, பின்னர் அதேபகுதியில் உள்ள மரத்தில்மோதி நின்றது.

அதைத்தொடர்ந்து காரை விரட்டிச்சென்ற பொதுமக்கள் காரில் இருந்த நபரைப் பிடித்துத் தாக்கினர். அப்போது அவர் போதை மயக்கத்திலிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரணாம்பட்டு போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த நபரை மேல்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பேரணாம்பட்டு டவுன் லால் மசூதி தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவருடைய மகன் இம்ரான் அஜீஸ் (38) என்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த நபர் ஓட்டி சென்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, ஒரு வாள், 4 செல்போன்கள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பி டி.வி.9 என்ற பெயரில், வேலூர் பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையும் இருந்தது. இது போலீசாருக்கு அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து காவல்நிலையத்திற்கு விரைந்த அவர் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார். கார், துப்பாக்கிகள், கத்தி, வாள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இம்ரான் அஜீஸ் பிடிபட்டதால் அவருக்கு, வேறு கும்பலுடன் ஏதும் தொடர்பு உள்ளதா?, எதற்காக ஆயுதங்களுடன் திரிந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்