'மச்சான் என் கல்யாணத்துலயா இந்த வேலைய பாத்தீங்க'... 'கல்யாண வீட்டை' தெறிக்க விட்ட பேனர் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண நிகழ்ச்சியில் இளைஞர்கள் வைத்த திருமண வாழ்த்து பேனர் தான், தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
!['மச்சான் என் கல்யாணத்துலயா இந்த வேலைய பாத்தீங்க'... 'கல்யாண வீட்டை' தெறிக்க விட்ட பேனர் ! 'மச்சான் என் கல்யாணத்துலயா இந்த வேலைய பாத்தீங்க'... 'கல்யாண வீட்டை' தெறிக்க விட்ட பேனர் !](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/groom-friends-printed-nithyananda-photo-in-the-wedding-wishes-banner-thum.jpg)
திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு லால்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வருவோரை வரவேற்றும், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சார்பில் நண்பர்கள் பேனர்களை வைத்திருந்தனர். அதில் மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனர் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ‘நோ சூடு நோ சொரணை’ என்று நித்தியானந்தா கூறும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து மணமகனின் நண்பர்கள் கூறும்போது, '' நித்தியானந்தா எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. யார் எது சொன்னாலும் அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ? அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் அவருடைய கொள்கை எங்களுக்கு ரொம்ப பிடித்துள்ளது. எங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறதோ? அதனை நித்தியானந்தா போன்று நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம். அவரைப் போல் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நாங்களும் ஆசைப்படுகிறோம்'' என்றனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள நித்தியானந்தாவை காவல்துறை தேடி வரும் நிலையில், திருமண வாழ்த்து பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படத்தோடு மணமகன் மற்றும் மணமகளின் புகைப்படத்தையும் போட்டு, மணமகனுக்கு அவரது நண்பர்கள் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என, திருமணத்திற்கு வந்தவர்கள் புலம்பிக் கொண்டே சென்றார்கள்.