ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ‘தக்காளி’ உள்பட 16 காய்கறிகள் விற்பனை.. விலை விவரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழைக்காலத்தை முன்னிட்டு வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள், குறிப்பாக தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85/-ரூ.100/- வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று (புதன்கிழமை) மதியம் வரை தோராயமாக 8 MT தக்காளி மற்றும் இதர காய்கறிகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெளிச்சந்தை விலையை விட குறைந்த விலையில் பின்வரும் விவரப்படி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி 1 கிலோ வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பசுமை பண்ணை நுகர்வோர் கடையில் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உருளை கிழங்கு 45 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 38 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய் 80 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் 70 ரூபாய்க்கு பண்ணை கடையில் விற்கப்படுகிறது.
45 ரூபாய் ஆக உள்ள சுரக்காய் 43 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 45 ரூபாய்க்கு விற்கப்படும் பீட்ருட் இங்கு 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் 70 ரூபாய்க்கும், கோஸ் 28 ரூபாய்க்கும், கொத்தமல்லி 15 ரூபாய்க்கும், புதினா 4 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 32 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 65 ரூபாய்க்கும், சௌசௌ 20 ரூபாய்க்கும், நூக்கல் 42 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 15 ரூபாய்க்கும், முருங்கை காய் 110 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ள காமதேனு உள்ளிட்ட குறிப்பிட்ட ரேஷன் கடைகளிலும் காய்கறி விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்