கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பி உள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி கற்றலை புகுத்தி உள்ளார் இந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.
பள்ளி மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடனமாடி அதில் மாணவர்களையும் இணைத்து உற்சாகப்படுத்துகிறார் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக நாடு முழுவதுமாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், பள்ளிகளுக்கு ஆன்லைன் வழியில் பாடம் எடுக்கும்மாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதனால் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கத் தொடங்கினர். ஆனால், ஆன்லைன் வகுப்புகள் என்பது பள்ளி வந்து கற்பது போல் இல்லை என மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்து வந்தனர். தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து பயில அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்துப் பள்ளிகளிலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் வந்து தங்கள் கற்றலைத் தொடங்கி உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வருவதால் மாணவர்களின் கற்றலின் போது மனச்சோர்வு ஏற்படுத்தாமல் பாடம் எடுக்க ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர். மாணவர்கள் உற்சாகமாக பாடங்களைக் கற்க ஆசிரியை கவிதா நடனத்தை ஒரு உத்தியாகக் கையாண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஆகப் பணியாற்றுபவர் கவிதா.
இவர் தனது வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க நடனமாடி பயிற்றுவிக்கிறார். பின்னர் வகுப்பு மாணவர்கள், மாணவிகளை இணைத்துக் கொண்டு சேர்ந்து நடனமாடி தமிழ் எழுத்துக்களை அவர்களது மனதில் பதிய வைக்கிறார். கொரோனா இடைவெளிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் முதல் 4 வாரங்களுக்கு பள்ளிகளில் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் தான் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடிகர் சூர்யா நடித்து வெளியாகி பிரபலமான 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடல் நடன அசைவுகளைப் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர் கவிதா. இதை வைத்து 'க, ங, ச...' பயிற்றுவித்து அசத்துகிறார்.
மற்ற செய்திகள்