'பிரேக் பிடிக்காமல்’... ‘பின் நோக்கி நகர்ந்த’... ‘அரசுப் பேருந்தால் நிகழ்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரயில்வே கேட் பகுதியில் ஏற்றத்தில் இருந்த அரசுப் பேருந்து ஒன்று, பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பிரேக் பிடிக்காமல்’... ‘பின் நோக்கி நகர்ந்த’... ‘அரசுப் பேருந்தால் நிகழ்ந்த பரிதாபம்'!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழையப் பேருந்து நிலையத்தில் இருந்து, வெம்பக்கோட்டை நோக்கி, அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை சஞ்சீவி நாதன் என்பவர் ஓட்டி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மலையடிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில், ரயில் கடப்பதற்காக, ரயில்வே கதவு மூடப்பட்டிருந்தது. இதனால் ரயில்வே கேட் முன்பாக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார். வண்டி நிறுத்தப்பட்ட இடமானது, சாலையில் இருந்து சுமார் 8 அடி உயரத்தில் இருந்தது.

ரயில் கடந்த பின்னர் அரசுப் பேருந்தை, அதன் ஓட்டுநர் இயக்கி உள்ளார். அப்போது பிரேக் பிடிக்காமல் போகவே, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பின்புறமாக அப்படியே நகர்ந்து வந்துள்ளது. இதனால் பேருந்துக்கு பின்புறம் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த வாகன ஓட்டிகள், அலறியபடியே வாகனங்களிலிருந்து வெளியேறினர். பேருந்தின் பின்புறம் நின்றிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது கார் உள்ளிட்ட 2 கார்கள், 3 பேருடைய இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மிதி வண்டி ஆகியவை பேருந்து சக்கரத்தில் சிக்கி நொறுங்கியது.

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள், உடனடியாக பெரிய கற்களை சக்கரத்தின் பின்புறம் வைத்து பேருந்தை நிறுத்தினர். அதன்பின்னர் பேருந்தை இயக்க முடியாமல் போகவே, பொது மக்கள் இணைந்து பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இந்த விபத்தில் நல்லவேளையாக யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BRAKE, FAILURE, RAJAPALAYAM, GOVERNMENT, BUS, STATE