"ஊர்லருந்து வந்ததை வெளில சொல்லிடாதீங்க".. மாமனாரிடம் துபாய் ரிட்டர்ன் மருமகன் கொடுத்த பெட்டி.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. அடுத்தடுத்து வந்த ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா. 38 வயதான இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் தனியார் ஏஜென்சி மூலமாக வெளிநாடு சென்றிருக்கிறார் பாலையா. ஆனால், சரியான வேலை அமையாததால் மனவிரக்தியில் அவர் இருந்தபோது ஒரு கும்பல் அவரை அணுகியிருக்கிறது. அப்போது அவரிடம் ஒரு பெட்டியை கொடுத்து தாங்கள் சொல்பவரிடம் கொடுத்துவிடும்படி சொல்லியிருக்கிறது.
பெட்டி
ஊருக்கு போனால் போதும் என்ற நிலையில் இருந்த பாலையா, அந்த கும்பலின் வார்த்தையை நம்பியிருக்கிறார். இதனையடுத்து அவர்கள் கொடுத்த பெட்டியுடன் இந்தியா திரும்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் சொல்லியபடி யாரும் விமான நிலையத்துக்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர் லாவகமாக சொந்த ஊருக்கு தப்பிச் சென்றிருக்கிறார். அப்போது அந்த பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் தங்க பிஸ்கட்டுகள், சாக்லேட் மற்றும் பேரீச்சம்பழங்கள் இருந்திருக்கின்றன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே பேரலையூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் பெட்டியை கொடுத்திருக்கிறார். மேலும் ஊருக்கு திரும்பியதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என தெரிவித்திருக்கிறார். இதனிடையே பாலையாவிடம் பெட்டியை கொடுத்த 9 பேர்கொண்ட கும்பல் அவரது மாமனார் வீட்டிற்கு வந்து பெட்டியை கொடுக்கும்படி கேட்டிருக்கின்றனர். தனக்கு பெட்டி குறித்து ஏதும் தெரியாது என அவர் சொல்லியிருக்கிறார். இதனால் ஊரார் முன்னலையில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது.
தப்பிய கும்பல்
அப்போது பெட்டியை தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் பாலையாவின் மாமனார். அப்போது அவர் தனது வீட்டுக்கு செல்ல கூடவே கும்பலை சேர்ந்த 4 பேர் சென்றிருக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு 4 பேரும் காரில் தப்பிச் செல்லவே, விஷயத்தை அறிந்த ஊரார் மீதமிருந்த 5 பேரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே ஊருக்கு திரும்பிய தனது கணவர் வீட்டுக்கு வரவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரும்படி பாலையாவின் மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இந்த விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது, திட்டக்குடி அருகே பெட்டி ஒன்று சாலை ஓரத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதில் சாக்லேட்கள் மற்றும் பேரிச்சம்பழங்கள் இருந்திருக்கின்றன.
பாலையாவிடம் இருந்த பெட்டி தான் அது என அறிந்த போலீசார், தங்கத்துடன் தப்பிச்சென்ற கும்பலையும், பாலையாவையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்