'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம் கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிக்டாக் மூலம் 97,000 ரூபாய் மோசடி செய்து இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(23). இவர் மதுரையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் டிக்டாக் மற்றும் முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு என்பதால் இன்னும் அதிக நேரத்தை டிக்டாக் செயலியில் செலவழித்து வந்தார்.
அப்போது டிக்டாக் செயலி மூலம் திருப்பூரை சேர்ந்த சுசி(எ) அம்முக்குட்டி என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து நாளடைவில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சுசி மீது ராமச்சந்திரன் அதிக அன்பு காட்டியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசி, தனது குடும்பத்தில் பிரச்சனை எனவும், மருத்துவ செலவுக்கு பணம் தேவை எனவும் பல்வேறு காரணங்களை கூறி அவ்வப்போது ராமச்சந்திரனிடம் பணத்தை கறந்துள்ளார். மொத்தமாக 97,000 ரூபாய் பணத்தை ராமச்சந்திரன் சுசியின் வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட சுசி, பின்னர் ராமச்சந்திரனிடம் பேசாமலும், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் பக்கம் தலை காட்டாமலும் இருந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து சுசி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
பின்னர் மதுரை காவல் ஆணையரின் உத்தரவின் பெயரில், திருப்பூர் ஆலங்காடு அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த சுசியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆடம்பரமாக வாழ நினைத்த இளம்பெண் சுசி, அதற்கு ஒரு கருவியாக டிக்டாக்கை பயன்படுத்தியுள்ளார் என்றும், இதே போல பல பேரிடம் பண மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்