‘சென்னையை ஒட்டிய இந்தப் பகுதிகளிலும்’... ‘நான்கு நாட்கள் முழு ஊரடங்கு’... வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட பலப் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல் 29-ம் தேதி இரவு வரையும், சேலம், திருப்பூரில் 26-ம் தேதி காலை முதல் 28-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளிலும், ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகளிலும், சிட்லப்பாக்கம், திருநீர்மலை மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சோழவரம் ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 13 கிராம பஞ்சாயத்துகளிலும், புழல் ஒன்றியத்தில் 7 கிராம பஞ்சாயத்துகளிலும், பூந்தமல்லி ஒன்றியத்தில் 28 கிராம பஞ்சாயத்துகளிலும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.