குளிர்பதன பழக்கிடங்கில் சிக்கிய தொழிலாளி.. 12 மணிநேரம் உயிருக்குப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அம்பத்தூர் அருகே பழக்கிடங்கில் உள்ள பழக்குவியலுக்குள் சிக்கி, உயிருக்கு போராடிய தொழிலாளியை, மீட்புக்குழுவினர் 12 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.

குளிர்பதன பழக்கிடங்கில் சிக்கிய தொழிலாளி.. 12 மணிநேரம் உயிருக்குப் போராட்டம்!

சென்னை ஆவடி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் தனியார் குளிர் பதன பழ கிடங்கு ஒன்று உள்ளது. இந்த பழக்கிடங்கானது சுமார் 2000 டன் பழங்களை வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டதாகும். இதில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிடங்கில் 12-க்கும் மேற்பட்ட அசாம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர். 500 டன் எடையுள்ள பழப்பெட்டிகள் அடங்கிய பழங்களை ஏற்றி இறக்கும் லிப்ட்  வாகனம் இரும்பு தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  இருந்த பழங்கள் சரிந்து விழுந்தன. இதில் 4 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பழக்குவியலில் சிக்கிய 3 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ஒரு தொழிலாளியை மீட்க முடியாமல் போனது. 

ஆனால், மிஞ்சிய ஒருவரை உடனடியாக மீட்க முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வந்தனர். பழக்கிடங்கில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்ததால் தொழிலாளியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் 12 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளியை மீட்புகுழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வடமாநில தொழிலாளியான அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பழக்கிடங்கின் உரிமையாளரிடம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

AVADI