"டிரைவர் அண்ணே...!" "தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே..." 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இருந்து, இரண்டு நாட்களில் மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கத்தை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளது. பலர் கொரோனா அச்சம் காரணமாக விடுமுறை எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும், பல மடங்கு அதிகரித்தது. இதனால், ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திணறினர்.
மேலும், சென்னையில் போதுமான விரைவு பேருந்துகள் இல்லாததால், சென்னை மாநகர பேருந்துகளை இயக்கவும், தனியார் பேருந்துகளை இயக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, 2,450 பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 400 பேருந்துகளும் என, 2,850 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவற்றில், 1.90 லட்சம் பேர் பயணித்தனர். தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட, 430 அரசு பேருந்துகளில், 29 ஆயிரம் பேர் பயணித்தனர். இதுமட்டுமின்றி, தனியார் ஆம்னி பேருந்துகள், வேன்கள், கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என சுமார் 2 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல, நேற்றும் மதியம், 12:00 மணி வரை இயக்கப்பட்ட, அரசு பேருந்துகளில், 1 லட்சம் பேரும், தனியார் வாகனங்களில், 50 ஆயிரம் பேரும் பயணித்தனர்.
இந்த வகையில், இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற தினங்களில் கூட இந்த அளவு கூட்டம் இல்லை என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.