எதே கல்யாண பந்தியில் கலவரமா.. இளைஞரின் திருமணத்தில் நண்பர்கள் வச்ச கட் அவுட்.. அந்த பலகாரம் மேட்டர் இருக்கே.. !
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழனியில் இளைஞர் ஒருவரின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வைத்த பிளெக்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமணம்
பொதுவாகவே திருமணம் பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. அதிலும் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றபடி திருமண வேலைகளை திட்டமிடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்கள், வினோதமான முறையில் திருமணத்திற்கு பிளெக்ஸ் வைப்பது என காலம் மாறிவிட்டது. அந்த வகையில் இளைஞரின் திருமணத்துக்கு நாளிதழ் வடிவில் பிளெக்ஸ் வைத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்கள் மாப்பிள்ளையின் நண்பர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் கவுதம். இவரும் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். காதல் விஷயத்தை இருவரும் வீட்டில் கூறிய நிலையில், பெற்றோரின் சம்மதப்படி கடந்த 29 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் தான் இந்த வித்தியாசமான பிளெக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆயுள் தண்டனை
அந்த பிளெக்ஸ்-ல் காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், விளையாட்டுச் செய்திகள் என கல்யாண பந்தியில் கலவரம் கரிக்கஞ்சிக்கு கைகலப்பு செய்த சதீஷ், தீபராஜ், முருகன் ஆகிய இளைஞர்கள் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், பலகாரத்தில் முடிந்த பரிதாபங்கள் என்ற பெயரில் பால் விற்க சென்ற இடத்தில் கவிதாஸ், அருண், கார்த்தி என்பவர்கள் பலகாரம் திருடி பளார் என்று அரை வாங்கிய இளைஞர்கள் என புகைப்படத்துடன் போட்டு மிரட்டி விட்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். மேலும், 'கல்யாண மாலை எங்களுக்குத் தேவை' என பாண்டியன் காளிதாஸ் ராஜேஷ் ஆகியோருக்கு பெண்பார்க்கும் படலமும் இந்த பிளெக்ஸ்-ல் இடம்பெற்றிருக்கிறது.
கல்யாணத்துக்கு வந்த பலரும் இந்த பிளெக்ஸ்-ஐ பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வினோத பிளெக்ஸ்-ன் போட்டோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்