வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி வளைகாப்பு.. வறுமையில் தவித்த மாற்றுத் திறனாளி தம்பதியை அன்பால் திக்குமுக்காட செய்த நண்பர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வறுமையில் வாடிய மாற்றுத் திறனாளி தம்பதியினருக்கு அவரது நண்பர்கள் வாட்சாப் மூலமாக நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ செய்திருக்கிறது.
திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். மாற்றுத் திறனாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான தமிழ் செல்வியை காதலித்து வந்திருக்கிறார். தமிழ் செல்விக்கும் விருப்பம் இருந்ததால் கடந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்துக்கு பெற்றோரிடையே எதிர்ப்பு இருந்த நிலையில் பீனிக்ஸ் சிறப்பு பள்ளி மற்றும் அன்னை தெரசா குழு ஆகியவை இணைந்து இவர்களது திருமணத்தை நடத்தியுள்ளன. இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூரில் வசித்துவருகின்றனர்.
வளைகாப்பு
இந்நிலையில், தற்போது தமிழ் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த போதிய வசதி இல்லாததால் குமார் தவித்து வந்திருக்கிறார். இதனிடையே அன்னை தெரசா வாட்சப் குழுவில் இதுபற்றிய தகவல் பகிரப்பட்டிருக்கிறது. உடனடியாக தமிழ் செல்விக்கு வளைகாப்பு நடத்த வாட்சப் குழுவில் இருந்த பலரும் தங்களால் முடிந்த பணத்தை அளித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து நண்பர்கள், வாட்சப் குழு உறுப்பினர்கள் சீர்வரிசை பொருட்களுடன் தமிழ் செல்வி- குமார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இந்த தம்பதியினர். இதனிடையே நண்பர்கள் தமிழ் செல்வி மற்றும் குமாருக்கு சந்தனம் பூசி சடங்குகளை செய்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சி
இதுகுறித்து பேசிய குமார்," கடந்த ஆண்டு பீனிக்ஸ் சிறப்பு பள்ளி மற்றும் அன்னை தெரசா குழுவை சேர்ந்தவர்கள் எங்களுக்கு திருமணம் செய்துவைத்தனர். இந்நிலையில் எனது மனைவி 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனையடுத்து அன்னை தெரசா வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி நண்பர்கள் வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என்றார்.
BCA பட்டதாரியான குமார், போதிய பொருளாதார வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாகவும் அரசு தங்களுக்கு ஏதாவது உதவி செய்தால் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். மாற்றுத் திறனாளி தம்பதிக்கு வாட்சப் குழு மூலமாக நிதி திரட்டி நண்பர்கள் வளைகாப்பு நடத்திய சம்பவம் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்