கோலமாவு கல் எடுக்கப்போன 4 பெண்கள்.. திடீரென சரிந்து விழுந்த மண்.. பதற வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோலமாவு கல் எடுக்கும் போது மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சாமநத்தம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்காக சிலர் மண் எடுத்துள்ளனர். 10 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்தபோது வெள்ளை நிற கற்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அப்படியே அதை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இந்த வெள்ளை நிறக் கற்களை பொடி செய்து கோலமாவாக பயன்படுத்தலாம் என அக்கிராமப் பெண்கள் சிலர் நினைத்துள்ளனர். அதன்படி சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலாம்மா ஆகிய 4 பேர் அப்பகுதிக்கு சென்று கற்களை சேகரித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து அவர்கள் 4 பேர் மீதும் விழுந்துள்ளது. இதை பார்த்த சிலர் உடனே ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மக்கள் மண்ணில் புதைந்து கிடந்த 4 பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து மற்ற இருவரை மேல்சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோலமாவு கல் எடுக்கச் சென்று மண்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்