'நாங்க கஷ்டப்பட்டாலும் பையன் டாக்டரா திரும்பி வருவான்னு நெனச்சனே'... 'உடைந்து போன மொத்த குடும்பம்'... ரஷ்யாவில் தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பல கனவுகளுடன் ரஷ்யாவிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் தற்போது சடலமாகத் திரும்பி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சோகம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மோகன். இவர், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ஸ்டீபன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார். ஓல்கொகார்ட் பகுதியில் மருத்துவம் படிக்கும் பல தமிழக மாணவர்கள் அங்குத் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஸ்டீபன் நேற்று முன்தினம் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்றார். அங்கு நண்பர்களோடு சென்ற அவர் நதியில் இறங்கி விளையாடிக் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.
அப்போது திடீரென மாணவர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஸ்டீபனும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தங்களது கண்ணுக்கு முன்னாடியே நண்பர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்த மற்ற இரண்டு நண்பர்களும் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால் சோகத்தின் உச்சமாக அவர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இதையடுத்து சில மணி நேரத்திற்குப் பிறகு ஸ்டீபன் உள்பட 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது.
இதில் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் அடக்கம். கரை ஒதுங்கிய உடலைக் கைப்பற்றிய போலீசார், 4 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இதனிடையே பலியான 4 பேரின் உடல்களைத் தமிழகத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த மாணவர் ஸ்டீபன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும் மகன் நன்றாகப் படித்ததால், கஷ்டப்பட்டாவது மகனை டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்டீபனை ரஷ்யாவிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைத்தார்கள். ஆனால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது நண்பனைக் காப்பாற்ற முயன்று ஸ்டீபன் உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் நொறுங்கிப் போனார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்