"கேங்ஸ்டர் கேர்ள்ஸ்... வாட்ஸ்ஆப் குரூப்...! எங்க 4 பேருக்கு பயம்னா என்னன்னே தெரியாது..." பொடனியில் தட்டி பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஆவடியில் மாயமான 4 பெண்களை போலீசார் பெங்களூருவிலிருந்து மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சென்னை ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளைக் காணவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் கடந்த 20-ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மாயமான மாணவி ஒருவர், தன்னுடைய செல்போனை எடுத்துச் சென்றிருக்கும் தகவல் போலீசாருக்குக் கிடைத்தது. உடனடியாக அந்த செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில் அது பெங்களூரு ரயில் நிலையத்தைக் காட்டியது. உடனடியாக பெங்களூரு காவல் துறையைத் தொடர்பு கொண்டு 4 மாணவிகளையும் போலீசார் மீட்டனர்.
இதையடுத்து மாணவிகளை பெங்களூருவிலிருந்து சென்னை அழைத்துவந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்த போது, "4 பேரும் நெருங்கிய தோழிகள். இந்த மாணவிகள் `கேங்ஸ்டர் கேர்ள்ஸ்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் உள்ளனர். அதில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இந்தச் சமயத்தில் பள்ளியிலும் வீட்டிலும் 4 மாணவிகளைச் சரியாகப் படிக்கவில்லை என்று கண்டித்துள்ளனர். அதனால், கடந்த 20ம் தேதி காலையில் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் இருப்பிடம் தெரியவந்து மீட்கப்பட்டனர்" எனக் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட மாணவிகளிடம் பேசிய போது, எங்களுக்கு எந்த பயமும் இல்லை, பெற்றோரை பயமுறுத்தவே பெங்களூரு சென்றோம், எனக் கூறியுள்ளனர். மாணவிகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.