‘அமெரிக்கா செல்லும்’... ‘பெற்றோரை வழியனுப்ப வந்த’... ‘ஒட்டு மொத்த குடும்பத்திற்கு’... ‘திடீரென திரும்பிய லாரியால் நிகழ்ந்த பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோரை விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்த குடும்பம் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஒங்கோல் பகுதியில் வசித்து வருபவர் யஷ்வந்த் சிங். இவருக்கு அனுசெல்வி (27) என்ற மனைவியும், ரியான் செரி ஒரு வயது மகனும் இருந்தனர். யஷ்வந்தின் பெற்றோர், அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்திற்கு வந்தனர். பெற்றோரை வழியனுப்புவதற்காக காரில் சென்ற யஷ்வந்த் குடும்பத்துடன், யஷ்வந்தின் அக்காள் விஜயலட்சுமி (39), அவரது மகள்கள் நமிதா (14), ரித்திவிகா (12) ஆகியோரும் வந்தனர். பெற்றோரை அமெரிக்காவுக்கு வழியனுப்பிவிட்டு யஷ்வந்த்தும், அவரது அக்காள் குடும்பமும், மீண்டும் காரில் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன பனங்காடு அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது, முன்னால் பால் ஏற்றிய டேங்கர் லாரி சென்றது. திடீரென டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்துவதற்காக அந்த லாரி ஓட்டுநர் வண்டியை திருப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பின்னால் காரை ஓட்டி வந்த யஷ்வந்த், காரை நிறுத்த முடியாமல் இருந்தநிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி, காரில் இருந்த மனைவி அனுசெல்வி, அவரது மகன் ரியான்செரி, அக்காள் விஜயலட்சமி, அக்காள்மகள் நமிதா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பலத்த காயம் அடைந்த யஷ்வந்த் மற்றும் ரித்விகாவை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.