சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் உள்ள புதர்களில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. இந்த மைதானம் புதர் மண்டி அதிகளவிலான குப்பைகளுடன் காட்சியளிக்கும் நிலையில், திடீரென இன்று மதியம் 3.30 மணியளவில் அவற்றில் தீ பிடித்தது.
காற்றின் வேகம் காரணமாக விரைந்து பரவிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. தீ விபத்து காரணமாக எழுந்த புகை மூட்டம் விண்ணை முட்டும் அளவிற்கு பல அடி உயரத்திற்கு எழுந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 6 தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் வந்து தீயை அணைத்து வருகின்றனர். தீ மேலும் பரவாமல் தடுக்கவும், புகை மூட்டத்தை கட்டுப்படுத்தவும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை கொண்டு அணைத்து வருகிறார்கள். இதனிடையே தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த தீ விபத்து காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காட்சி அளித்தவந்தது.