நீ செத்து போயிட்டன்னு 'சர்டிபிகேட்' கொண்டு வா... மண்ணெண்ணெய் கேனுடன் சென்று... இரண்டு குழந்தைகளின் தாய் செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனியார் நிதி நிறுவனத்தின் முன் குழந்தைகளோடு தாய் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீ செத்து போயிட்டன்னு 'சர்டிபிகேட்' கொண்டு வா... மண்ணெண்ணெய் கேனுடன் சென்று... இரண்டு குழந்தைகளின் தாய் செய்த அதிர்ச்சி காரியம்...!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு புது தெருவை சேர்ந்த சுதந்திரமணியின் மனைவி சங்கீதா (30) என்பவர் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இதனை சங்கீதா வாரந்தோறும் வியாழனன்று ரூ.410 என தவணையாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு தவணை கட்ட தாமதமானது என்று கூறப்படும் நிலையில் தனியார் நிறுவனத்தில் இருந்து பணம் வசூலிக்க வந்தவர் சங்கீதா, அவரது குழந்தைகள் மற்றும் கணவரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த சங்கீதாவின் கணவர் சுதந்திரமணி, கடன் வசூலிக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு பணம் வசூலிக்க வந்தவர் மீண்டும் சங்கீதாவை மீண்டும் மீண்டும் தரக்குறைவாக பேசி, உனது இறப்பு சான்றிதழ் கொண்டு வா கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து விடுகிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா, அவரது ஆண் குழந்தைகளான இளங்கவி (7), சுதர்சன் (5) ஆகியோரை அழைத்துக்கொண்டு மண்ணெண்ணெய் கேனுடன் சென்று சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் முன்னால் நின்று தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரையும், குழந்தைகளையும் காப்பாற்றி சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது சேத்தியாத்தோப்பு மற்றும் இப்பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுபோன்று தனியார் நிதிநிறுவன கடன் வசூலிப்பவர்கள் பலர் பெண்களை தரக்குறைவாக பேசி அவர்களை மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் தூண்டுகின்றனர். ஆகையால் தமிழக அரசும், காவல்துறையும் இவர்களின் மேல் தகுந்த நடவடிக்கை எடுத்து பலரின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

DEATHCERTIFICATE