“பணிஞ்சு போகாதீங்க!”... “ராமருக்காக பேசாம.. வேற யாருக்காக பேசறது?”.. ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல பெண் செய்தி வாசிப்பாளர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு இதழ் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, 1971-ல் நடந்த பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் ராமர்-சீதை சிலைகள் இழிவுபடுத்தப் பட்டதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும், அந்த செய்தியை சோவின் துக்ளக் இதழ் மட்டுமே துணிச்சலாக பதிவு செய்ததாகவும் பேசினார்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட கழகங்களும், இயக்கங்களும், அமைப்புகளும் ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பத்திரிகையில் வெளிவந்ததையே தான் பேசியதாகவும், தான் ஒன்றும் கற்பனையாக பேசவில்லை என்பதால், மன்னிப்போ வருத்தமோ கேட்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிய நிலையில், தூர்தர்ஷன் புகழ் பிரபல செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி, ‘Keep it up ரஜினி!. நீங்கள் பேசியதற்காக மன்னிப்பு கேட்க தேவையில்ல. ஆமாம், ராமரும் அவமானப்படுத்தப் பட்டு, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்றது இன்றைக்கும் என்னை காயப்படுத்தவே செய்கிறது’ என்று தன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில் ‘துக்ளக்கில் அப்போது வெளிவந்த அந்த புகைப்படங்கள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த இளம் வயதிலும் நான் அச்சப்பட்டேன். இதை இவ்வாறாக உணர நான் ஒரு சங்கியாக இருக்க வேண்டியதில்லை. கடவுள் ராமருக்காக பேசவில்லையென்றால், வேறு யாருக்காக நாம் பேசுவது? பணிந்து போகீதீர்கள்’ என்று ஷோபனா ரவி எழுதியுள்ளார்.