விஷப்பாம்பு கடித்தும் அசால்டாக இருந்த மாணவர் விடுதி பெண் காவலர் பரிதாப மரணம்.. ஏலகிரி மலையில் நிகழ்ந்த சோக சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏலகிரியில் கடுமையான விஷப்பாம்பு கடித்தும் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லாத மாணவர் விடுதி பெண் காவலர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் இரவு நேர காப்பாளராக பணிபுரிந்து வருபவர் ருக்மணி. இவருடைய வயது 57 ஆகும். எப்போதும் இரவு நேரத்தில் மாணவர்கள் தங்கியுள்ள இந்த விடுதியை சுற்றி வலம் வருவது ருக்மணிக்கு வழக்கம்.
அதிர்ச்சி
அந்த வகையில், நேற்று இரவு ருக்மணி தனது பணியில் ஈடுபட்டிருக்கிறார். வழக்கம்போல விடுதியை அவர் சுற்றிவரும் போது, கட்டு விரியன் பாம்பு ஒன்று அவரை கடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் விடுதியிலேயே ருக்மணி இரவு தங்கியதாக தெரிகிறது. ஆனால், நேரம் செல்லச் செல்ல அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக ருக்மணி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனிடையே பெண் காவலர் மரணமடைந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் ருக்மணியின் உடலை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு
இந்நிலையில், ஏலகிரி அரசு மலைவாழ் மாணவர் விடுதியில் பாம்பு கடித்து ருக்மணி உயிரிழந்தது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து , விசாரணையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்களால் தாக்கப்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, உரிய சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்