மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டால் உணவு இலவசம்.. சூப்பர் போட்டியை நடத்தி வரும் ஹோட்டல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளிர் தினத்தை முன்னிட்டு உணவகம் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிவிடும் போட்டி நடைபெற்றது.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் உள்ள வேதாஸ் உணவகம் வித்தியாசமாக போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. மாமியார்-மருமகளுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால் மாமியாரும், மருமகளும் ஜோடியாக உணவகத்துக்கு வந்து, மருமகளுக்கான உணவை மாமியாரும், மாமியாருக்கான உணவை மருமகளும் ஆர்டர் செய்ய வேண்டும்.
பின்னர் அந்த உணவை மிச்சம் வைக்காமல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிடும் ஜோடி வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. வித்தியாசமான இந்த போட்டி தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வளர்க்கும் விதமாக உள்ளதாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டி குறித்து தெரிவித்த உணவக உரிமையாளர் பூபதி, ‘எதற்காக இந்த போட்டி என்றால், மாமியார்-மருமகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், அன்பை பரிமாறுகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை நடத்தினோம். சாப்பிட்டுச் செல்லும் அனைவருக்கும் விதைப்பந்துகள் இலவசமாக வழங்குகிறோம்’ என தெரிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்