தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மழை பெய்யாத இடங்களில் வெப்பமானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி, குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக் கூடும்.
மேலும் வரும் 26-ம் தேதியன்று உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் கூடலூரில் 3 சென்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.