ஆசை வார்த்தைகளை கூறி மோசடி.. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க்.. உஷார் மக்களே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சோப்பு வாங்கினால் கார் இலவசமாக தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி விவசாயியை ஏமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசை வார்த்தைகளை கூறி மோசடி.. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நெட்வொர்க்.. உஷார் மக்களே!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராசு(45) என்ற விவசாயிடம் இருவர் வந்து சோப் வாங்கினால் பரிசுப்பொருள் விழும் என கூறியுள்ளனர். தொடர்ந்து தங்கராசு சோப் வாங்க அவருக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக விழுந்தது. இதனால் நெகிழ்ந்து போன தங்கராசுவிடம் இதற்கு இன்னொரு பரிசும் உள்ளது.

உங்களுக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக விழுந்துள்ளது. ரூபாய் 10 ஆயிரம் வரியாக கட்டினால் மோட்டார் சைக்கிளை தந்து விடுகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது தங்கராசுவிடம், உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்க ராசு, ரூ.45 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தார்.

அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து சென்றுவிட்டனர். மறுநாள் தங்கராசுவுக்கு கால் செய்த இருவரும் நாங்கள் சரியான ஆவணங்களை கொண்டு வரவில்லை. அதனால் போலீசில் மாட்டிக்கொண்டோம் நீங்கள் மேலும் ஒரு 20 ஆயிரம் போட்டு விடுங்கள் என்று சொல்லியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராசு அறந்தாங்கி போலீசில் புகார் செய்தார். அதற்கு போலீசார் நீங்கள் பணத்தை எடுத்து செல்லுங்கள். நாங்கள் பின்னால் வருகிறோம் என்று கூறினர். அதன்படி பொறி வைத்து அந்த இருவரையும் போலீசார் பிடித்தனர். விசாரணைக்குப் பின் தமிழ்நாடு முழுவதும் இதுபோல ஒரு நெட்வொர்க் இயங்குவதாக தெரிவித்த போலீசார் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.