12 வருஷமா 'பேச்சுவார்த்த' கெடையாது... பொண்ணுங்கள 'கரையேத்த' பணம் இல்ல... குடும்பத்துடன் 'தற்கொலை' செய்த திருச்சி ஆசிரியை... உருக்கமான பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட திருச்சி ஆசிரியை குறித்து உருக்கமான தகவல்கள் தெரிய  வந்துள்ளன.

12 வருஷமா 'பேச்சுவார்த்த' கெடையாது... பொண்ணுங்கள 'கரையேத்த' பணம் இல்ல... குடும்பத்துடன் 'தற்கொலை' செய்த திருச்சி ஆசிரியை... உருக்கமான பின்னணி!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பூலாங்குடி காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை விஜயகவுரி(59). கடந்த 2 நாட்களுக்கு மகள்கள் இருவருடன் சேர்ந்து சிலிண்டரை வெடிக்க விட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் ஒரே மகன் கடந்த 10 மாதங்களாக இருந்து கடைசியாக இரு நாட்களுக்கு முன் இறந்து போனார். அக்கம், பக்கத்தில் யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாத விஜயகவுரி மகன் இறந்ததை நினைத்து வருந்தி இருக்கிறார்.

தொடர்ந்து மகனின் இறந்த உடலை சமையலறைக்கு எடுத்துச்சென்று அங்கு மகள்கள் இருவருடன் சிலிண்டரை வெடிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இறந்து போன ஆசிரியை விஜயகவுரியின் குடும்பம் குறித்து தற்போது உருக்கமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-  மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட விஜயகவுரிக்கு சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி ஆகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்துள்ளார். பின்னர், அவர் பூலாங்குடி காலனியில் தங்கி மனைவி, மகளுடன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். விஜயகவுரிக்கு உடன் பிறந்த தம்பி ஜெயசங்கர். இவர், குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக தம்பி மற்றும் அவரது குடும்பத்துடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றும், உறவினர் வீடு என்று எங்கும் சென்றது இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் உள்ள உறவுகளையும் மறந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்படி ஒட்டும் இல்லை உறவுகளும் இல்லை என்ற நிலையில் விஜயகவுரி பணி ஓய்வு பெற்ற பின், தனது 2 மகள்கள், மகனுடன் வாழ்க்கையை கழித்துள்ளார். உறவுகள் என்று யாரும் இல்லாத பட்சத்தில் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் உதவிக்கு ஆட்கள் இன்றி சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். அதற்கு போதிய பணமும் இல்லை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் கடந்த 10 மாதத்திற்கு முன்பு மகன் விஜயகுமார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விட்ட பின்னர், அக்குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கிறது. சொந்தம் என்று இல்லாத மனவேதனையில் குடும்பத்துடன் தற்கொலை முடிவை தேடிக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் விஜயகவுரியின் சகோதரர் ஜெய்சங்கரை தேடிக்கண்டுபிடித்த போலீசார் அக்கா குடும்பம் இறந்து போன தகவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருச்சிக்கு வந்த அவரிடம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் திருச்சி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன.

மற்ற செய்திகள்