‘சிங்கிளா வீட்ல தங்குறது குற்றம்.. தெரியும்ல? எடுங்க ரூ.5 ஆயிரம் அபராதம்!’.. ‘உறையவைத்த சம்பவம்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிஜ போலீஸூக்கு டஃப் கொடுக்கும் வகையில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த போலி போலீஸார் தனிப்படை காவல் துறையிடம் கூண்டோடு சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சரவணம்பட்டியில் உள்ள பாரடைஸ் ஆண்கள் விடுதிக்குள் சிறப்புப் போலீஸ் என்று கூறி நுழைந்த இந்த கும்பல், விடுதியில் போதைப் பொருள் சோதனை நடத்துவதாகக் கூறி, மாணவர்கள் 3 பேரிடம் செல்போன்களை பிடுங்கிக் கொண்டு காவல் நிலையம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘நாங்க அப்படி வரவே இல்லையே?’ என்று ‘ஜினல் ஜினல் ஒரிஜினல் சரவணம்பட்டி’ போலீஸார் கூற விஷயம் அனைவருக்குமே புரிந்தது. இதனிடையே அப்பகுதி மக்கள் தங்களிடம் வாகன சோதனை என்கிற பெயரில் டி-ஷர்ட் அணிந்தபடி மடக்கி பணம் கேட்ட 3 பேரை பிடித்துக்கொண்டுவந்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள்தான் அந்த தனிப்படை கேடி போலீஸார் என்பது தெரியவந்தது.
இவர்களுள் வினோத் என்கிற நபர்தான் கேங் லீடர். இவர் போலி தனிப்படை போலீஸ் நபராக தன்னைக் காட்டிக்கொண்டு கோவையை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களிலும், பல்வேறு நபர்களிடமும் வாகன சோதனை, விசாரணை என்கிற பெயரில் பணம், செல்போன் என ஏகபோகத்துக்கும் மிரட்டி பறித்துள்ளார். இதையெல்லாம் விட கொடுமையாக, வீட்டில் சிங்கிளாக தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரிடம் இப்படி தனியாக தங்கியிருப்பது குற்றம் என்று 5000 ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதுடன், இதற்கான அபராதத் தொகையை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கட்டுமாறும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் மேட்டுப்பாளையம் போலீஸாரால் பிடிபட்டு ரிலீஸ் ஆன வினோத், சரவணம்பட்டி பகுதியில் இந்த கேங்கை வழிநடத்தி வந்ததோடு வீட்டிற்குத் தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு தனிமையில் செல்லும் காதலர்களையும் மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் சரவணம்பட்டி போலீஸாரால் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.