"நீ வந்து கூட்டிட்டு போய்டு".. மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல கணவனுக்கு தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான ஒரே மாதத்தில் மனைவி குறித்த உண்மையை அறிந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் கணவர் ஒருவர். இது ஈரோடு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் - கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது பெற்றோர், பல இடங்களில் பெண்பார்த்து வந்திருக்கின்றனர். ஆனால், பெண் கிடைக்காததால் பல புரோக்கர்கள் மூலமாக பெண் தேடி வந்திருக்கின்றனர் செல்வராஜ் - கண்ணம்மாள் தம்பதி.
திருமணம்
இறுதியில் பரிசபாளையத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா (27) என்ற பெண்ணின் விபரம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து பெண்பார்க்க சென்றபோது சரவணனுக்கு சரிதாவை பிடித்துப்போயிருக்கிறது. அப்போது சரிதாவின் குடும்பம் குறித்து விசாரிக்கையில் அவரது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) ஆதரவாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், திருமண புரோக்கருக்கு 1.2 லட்ச ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என விஜயலெட்சுமி தெரிவிக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வேறு இடத்தில் கடன்வாங்கி கொடுத்திருக்கின்றனர்.
வாய்ஸ்மெசேஜ்
இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி சரவணன் ஊரில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சரிதா தனது பெரியம்மா விஜயலட்சுமிக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார். எதேச்சையாக அதனை கேட்ட சரவணன் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்துபோய்விட்டார். அந்த வாய்ஸ் மெசேஜில், "என்னால் பல நாட்கள் இங்கே இருக்க முடியாது, இங்கே பணம் கிடைப்பது சிரமம். என்மீது இங்கே அனைவரும் பாசமாக இருக்கின்றனர். அதுவும் நான் பிரிந்து போனால் சரவணன் ஏதாவது செய்துகொள்வார் என தோன்றுகிறது. நீயாக வந்து கூட்டிச் செல்வது போல வா. அடுத்தமுறை வயதான ஆளை பிடி. அதுதான் சவுகரியம்" என கூறியிருந்திருக்கிறார் சரிதா.
ஸ்கெட்ச்
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க நினைத்திருக்கின்றனர் சரவணனும் அவரது நண்பர்களும். இதனையடுத்து, தனது நண்பர் ஒருவருக்கு பெண்பார்க்க வேண்டும் எனவும் விஜயலெட்சுமிக்கு தெரிந்த பெண் இருந்தால் சொல்லவும் என தனது மனைவியிடம் கூறியுள்ளார் சரவணன். இதனையடுத்து தனக்கு தெரிந்த கணவனை பிரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பிவைக்கும்படியும் கூறியுள்ளார் விஜயலெட்சுமி.
மேலும், மணப்பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார் அவர். இதனையடுத்து, பெண்ணை தனது நண்பருக்கு பிடித்துப்போய்விட்டதாகவும், நேரில் அழைத்துவந்தால் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் சரவணன் கூற விஜயலெட்சுமி ஒரு பெண்ணுடன் சரணவனுடைய ஊருக்கு வந்திருக்கிறார். மேலும், தனக்கு கமிஷன் ஏதும் வேண்டாம் என்றும் மற்ற ப்ரோக்கர்களுக்கு 80 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூற, சரவணனும் ஓகே சொல்லியிருக்கிறார்.
கைது
நேரில் வந்ததும் நடந்ததை விவரித்து, இதுபற்றி கேட்டிருக்கிறார் சரவணன். தங்களுடைய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதை அறிந்த விஜயலட்சுமி மற்றும் சரிதா ஆகியோர் தங்களது தவறை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
வயதான நபர்களை குறிவைத்து இதுபோன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலுக்கு எதிராக பங்களா புதூர் காவல்நிலையத்தில் சரவணனனின் வீட்டார் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி, சரிதா மற்றும் மற்றொரு பெண் ஆகிய மூவரையும் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்