'காமராஜர மெரினால அடக்கம் செய்யணும்னு கேட்டப்போ...' கருணாநிதி அப்போ என்ன சொன்னாரு தெரியுமா...? - தமிழக முதல்வர் விளக்கம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எடப்பாடிக்கு உள்பட்ட வனவாசியில் தமிழக முதல்வர் இன்று (03-04-2021) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு பதிலளித்த கருணாநிதி, மறைந்த முதலமைச்சர்களுக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாது.
ராமாவரம் தோட்டத்தில் அவருக்கு இடம் இருப்பதால் அங்கேயே அடக்கம் செய்து கொள்ளுங்கள் என கோப்புகளின் வாயிலாக தெரிவித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அதேபோல மறைந்த முதலமைச்சர் காமராஜர் இறந்த பொழுது மெரினாவில் அவரை அடக்கம் செய்ய முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தியதாகவும், அதற்கும் கருணாநிதி, காமராஜர் தற்போது முதலமைச்சராக இல்லை, ஆகவே, முன்னாள் முதலமைச்சருக்கு மெரினாவில் இடம் அளிக்க முடியாது என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அந்த அடிப்படையில் தான் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளிக்க வழிவகை இல்லை என்று, தான் தெரிவித்ததாக விளக்கமளித்தார். மேலும் கருணாநிதியை அடக்கம் செய்ய, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே கொடுத்ததாகவும், ஆனால் அதை பெற மறுத்து ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு சென்றதாகவும், நீதிமன்றத்தின் ஆணைப்படி மெரினாவில் அடக்கம் செய்ய இடம் அளித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மனைவி ஜானகி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோர் இறப்பின்போது என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவை தான், தானும் பின்பற்றியதாக முதல் அமைச்சர் விளக்கமளித்தார்கள்.
உண்மையை திரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தமது தந்தைக்கு ஆறடி நிலம் கூட கொடுக்கவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறி பிரசாரம் செய்து வருகிறார், இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.
இதற்கு முன்பாக, ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.மணியை ஆதரித்து முதல்வர் பிரசாரம் செய்தார். அப்போது, ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. இது எக்கு கோட்டையாக உருவாக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும். இன்றைய தினம் ஸ்டாலின் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் போடாத வேடமே இல்லை. இந்த ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி, அவதூறு பிரசாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறார்.
அந்த கனவு பலிக்காது. மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர். ஒருமித்த கருத்து எல்லாம் இணைந்து வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளோம். ஸ்டாலின் தலைமையில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர்.அதிமுகவை உருவாக்கினார். ஜெயலலிதா அதிமுகவை கட்டிக் காத்தார். இருபெரும் தலைவர்கள் வழியில் நான் கட்சியை ஆட்சியை வழிநடத்தி வருகிறேன். சேலம் மாவட்டத்தில் நான் எடப்பாடியை விட அதிகமாக ஓமலூருக்குத் தான் வந்து சென்றுள்ளேன். இந்தத் தொகுதி முழுக்க எனக்கு அத்துபடி. அனைத்து கிராமங்களுக்கும் வந்துள்ளேன். இங்கு நிற்கும் பல பேர் நேரடியாக எனக்குத் தெரியும்.
உங்களுக்குத் தெரிந்தவர், அறிமுகமானவர் முதலமைச்சராக உள்ளார். அப்படி ஸ்டாலினை தெரிந்தவர் என கூற முடியுமா. சேலம் மாவட்டம் முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமை உடையது. நம்முடைய மாவட்டத்தில் என்னென்ன பிரச்னை, என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளேன். நீண்ட காலம் அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அறிந்து, பிரச்சினைகளை தெரிந்து வைத்துள்ளேன். மீண்டும் ஜெயலலிதா அரசு தொடர அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். மழை வருகிறது. நல்ல சகுனம். மணி வெற்றி பெற்று விட்டார். இயற்கை நமக்கு சாதகமாக உள்ளது.
வறட்சி நீங்கி பசுமை பார்க்கிறோம். என்றைக்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. இயற்கையும் மக்களும் நமக்கு சாதகமாக உள்ளனர். குடிமராமத்து திட்டம் ஏரி, குளம் தூர்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஏரி ஆழப்படுத்தப்படுவதுடன் விவசாயிகளின் நிலங்களும் வளமாகிறது. விவசாயியாக இருப்பதால் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். விவசாயம் என்றால் நீர் தேவை. அவர்களுடைய எந்திரங்கள் வாங்க மானியம் வழங்குகிறோம். வறட்சி, புயல், தொடர்மழையால் பாதித்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.12 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஏப்ரல் 1-ந் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். 2011-ம் ஆண்டிற்கு முன்பு ஓமலூர் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நல்ல தரமான சாலைகள் அமைத்து உள் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளோம். ஓமலூர் தொகுதியில் 8 அம்மா மினி கிளினிக் அமைத்துள்ளோம். அதிகமான மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஓமலூர் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. நிலமற்ற,வீடற்ற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். எந்த நிலத்தையும் எடுக்காமல் சந்தை விலைக்கு வாங்கி வீடு கட்டப்பட உள்ளது. எந்த ஜாதி என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் வழங்கப்படும்.
. 4 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டின் முதலமைச்சரை யாருக்கும் தெரியாது என்று சொன்ன ஸ்டாலின், இன்றைக்கு அனைத்து ஊருக்கும் சென்று என்னைப் பற்றி விமர்சனம் செய்கிறார். திமுக ஆட்சியில் எதுவம் செய்யாததால், அதைப்பற்றி சொல்ல முடியாமல் என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னை எல்லோருக்கும் தெரிய வைத்து விட்டார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். படிப்படியாக மக்களின் ஆதரவோடு இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஆனால், ஸ்டாலின் அவருடைய அப்பாவின் செல்வாக்கில் இந்த நிலைக்கு வந்துள்ளார். படிப்படியாக வரும் பாதை எவ்வளவு கடினம் என்பது எனக்குத்தான் தெரியும்.
ஸ்டாலினுக்கு அந்த கஷ்டம் என்ன என்பதே தெரியாது. நமக்கு நாமே திட்டத்தில் விவசாய நிலத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஷீ போட்டு சென்ற ஸ்டாலின் என்னைப் பார்த்து போலி விவசாயி எனக் கூறி அவதூறு பரப்பி, கொச்சைப்படுத்தி, தாழ்த்திப் பேசுகிறார். ஜனநாயக நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு கருணாநிதி சூழ்ச்சி செய்து முதலமைச்சராக்கி விட்டார். வாய் பேச முடியாத நிலையில் கூட திமுக தலைவர் பதவியை, ஸ்டாலினுக்கு கொடுக்க வில்லை. உங்கள் அப்பாவே நம்பாதபோது, நாட்டு மக்கள் ஸ்டாலினை நம்புவார்கள். பெற்ற அப்பாவே உடல்நிலை சரியில்லாதபோது கூட ஸ்டாலினை நம்பாததில் இருந்தே அவருடைய தகுதி என்ன என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது.
70 வயதாகியும் சினிமா நடிகர் போல சுற்றி வருகிறார். எம்.ஜி.ஆர் என நினைக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். தந்தையின் வெளிச்சத்தில் ஸ்டாலின் வந்துள்ளார். ஆனால் உழைப்பால் எங்கள் விலாசத்தை தேடியுள்ளோம்.மக்களைப் பார்க்காமல் குடும்பத்தை மட்டுமே பார்த்து வருகிறார். ஆட்சி அதிகாரம் வந்து விட்டால், மக்களை ஸ்டாலினுக்கு கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். குடும்பத்தைத் தவிர்த்து திமுகவில் யாரும் முன்னுக்கு வரமுடியாது.
ஊர் ஊராக குறைகளை கேட்டு மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டு போடுகிறார். நூறு நாளில் முதலமைச்சரானவுடன் பூட்டை உடைத்து மனுக்களுக்கு தீர்வு காண்பேன் என்கிறார். பொய் பொருந்துற மாதிரி பேசினால் மெய் திருதிருவென முழிக்குமாம். விஞ்ஞான உலகில் மக்களை ஏமாற்ற முடியாது. இனிமேல் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது.மக்களை தந்திரமாக ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி வருகிறார்.
பதவியில் இருக்கும் போது ஏன் மனுவாங்கவில்லை. அதிகாரம் இருக்கும்போது மக்களை சந்திக்க மாட்டார். இந்த தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த தேர்தலில்வரை ஸ்டாலினை சந்திக்க மாட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைதது மாவட்டங்களுக்கும் ஏழெட்டு தடவை சென்று வந்துள்ளேன். மக்கள் பாதிக்கப்படும்போது, மக்களை நேரடியாக சென்று சந்தித்துள்ளேன்.
பொய் மூட்டைகளை எவ்வளவு அவிழ்த்து விட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.ஏழை எளிய மாணவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக அரசு. அப்போது அதிகாரத்தில் இருந்தபோது விட்டு விட்டு, இப்போது ரத்து செய்வேன் என்கிறார்.
அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 600 பேர் மருத்துவர்களாக முடியும். அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர், வாஷிங் மெஷின்,6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகை உயர்த்தி தரப்படும், இலவச கேபிள் இணைப்பு, ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன், 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும். இஸ்லாமிய பெருமக்களுக்கு நிறைய திட்டங்களை செய்துள்ளோம். இவ்வாறு பரப்புரையின்போது தமிழக முதல்வர் பேசினார்.
மற்ற செய்திகள்