'தமிழக இளைஞர்களே'... 'மாத சம்பளம் 72,000'... 'வெளிநாட்டில் வேலை'... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
இந்த வேலை வாய்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 'தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில் தமிழக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, அயர்லாந்து, கத்தார், ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்’ நிறுவனம் மூலம் கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்களுக்கு 50 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கான சம்பளம் (இந்திய மதிப்பில்) மாதம் ரூ. 72,000 ஆகும்.
மேலும், செவிலியர் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளவர்களுக்கு அயர்லாந்து ரெக்வயர் மென்ட் நிறுவனத்தில் ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 40 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. இதற்கான மாத சம்பளம் இரண்டரை லட்ச ரூபாய் ஆகும். அதே போல, இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 பேருக்கான வாய்ப்பும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோகாவிலுள்ள மருத்துவமனை ஒன்றிலும் வேலை வாய்ப்பு உள்ளது. மேலும், ஓமான் நாட்டிலும், எல்எல்சி நிறுவனத்திலும் பல பிரிவுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு அருகாமையிலுள்ள ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள டிவிஎஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆப்ரேட்டர்கள் 200 பேர் தேவைப்படுகின்றனர்.
இதுபோன்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர்கள் 91764 34488 மற்றும் 86674 07470 ஆகிய தொலைபேசி எண்கள், ovemcl@gamil.com என்ற இ-மெயில் முகவரியிலும், www.omcmanpower.com என்ற இணைய தளம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்