மனைவி மறைந்த அடுத்த கணமே 91 வயது முதியவருக்கு ஏற்பட்ட சோகம்.. மரணத்திலும் மனைவியை கைவிடாத பாசமிகு கணவர்.. !
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரத்தில் மனைவி காலமான செய்தியை கேட்டவுடன் கணவனும் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமண பந்தம் எப்போதும் வாழ்வின் இறுதி நொடி வரையில் நீடிக்க கூடியது. பரஸ்பர அன்பும், காதலும் நீடித்த பந்தத்திற்கு அஸ்திவாரங்களாக அமைகின்றன. இப்படியானவர்கள் மரணத்திலும் இணைபிரியாதவர்கள். இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது ஆறுமுகம் - சுலோச்சனா தம்பதியின் வாழ்க்கை.
தம்பதி
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய வயது 91. இவரும், இவருடைய மனைவி சுலோச்சனாவும் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதிக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அனைவர்க்கும் திருமணமான நிலையில் மகள் மட்டும் தனியே தனது கணவருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் மற்றும் சுலோச்சனா தம்பதி தங்களது இரு மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே வயது மூப்பு காரணமாக ஆறுமுகம் உடல்நிலை பாதிப்பு அடைந்திருக்கிறது. இதனால் அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி சுலோச்சனா மகன் மற்றும் மருமகள்கள் ஆறுமுகத்தை அன்போடு கவனித்து வந்திருக்கின்றனர். அடிக்கடி தனது கணவரிடம்,"உங்களுக்கு முன்னர் நான் இறைவனடி சேரவேண்டும்" என சுலோச்சனா சொல்லியதாக கூறுகின்றனர் அவரது உறவினர்கள்.
அதிர்ச்சி
இதனிடையே நேற்று காலை வழக்கம்போல காலையில் எழுந்து வீட்டு வேலைகளை மேற்கொண்டு வந்திருக்கிறார் சுலோச்சனா. அப்போது திடீரென அவர் மயக்கமடைந்து விழவே குடும்பத்தினர் பதறிப்போய், அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், எந்த பலனும் இல்லை. சுலோச்சனா மரணமடைந்தது புலனாகவே மகன் மற்றும் மருமகள்கள் கலங்கிப்போனார்கள். இதனையடுத்து, சுலோச்சனா உயிரிழந்தது குறித்து ஆறுகத்திடம் கூறியுள்ளனர் குடும்பத்தினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கொஞ்ச நேரத்தில் மயக்கமடைந்தார். சிறிது நேரத்திலேயே அவருடைய உயிரும் பிரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
இதனையடுத்து தம்பதியின் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் முடிந்தும் ஊர்வலமாக செல்லப்பட்டு மானாம்பதி மயானத்தில் இருவர் உடலையும் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி உயிரிழந்த செய்தியை கேட்டதும் கணவனும் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்