’தம்பி கொலைக்கு பழிக்கு பழி தீர்த்து’... 'சமாதியில் அண்ணன் செய்த காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை அருகே தம்பியை கொன்றவனை கொலை செய்து, ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்ததாக ஒருவர் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’தம்பி கொலைக்கு பழிக்கு பழி தீர்த்து’... 'சமாதியில் அண்ணன் செய்த காரியம்'!

திருப்புவனம் அருகே மிக்கேல்பட்டணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பிரசாந்த். இவர் கடந்த ஆண்டு மே மாதம் கச்சநத்தம் கிராமத்தில், 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரசாந்த், தனது நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், மாத்தூர் அருகே வேலங்குளம் கண்மாயில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மூர்த்தி, கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அவர், சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட வசதியாக, மதுரை கொடிமங்கலத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி, சிவன்மூர்த்தி தனது மாமாவின் தோப்பிற்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்த மர்மகும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுதொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். பிரசாந்த் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில், கொலையான பிரசாந்தின் அண்ணன் ஊர்காவலன் பெயரில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ‛திட்டமிட்டபடி முடித்துவிட்டேன். சிவன் மூர்த்தியை கொலை செய்து ரத்தத்தை தம்பியின் சமாதியில் தெளித்துவிட்டேன். இப்போது தனது தம்பி மகிழ்ந்திருப்பான். நான் போலீசில் சரணடைய உள்ளதாக' ஊர்காவலன் கூறியிருந்தார். இந்த ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊர்காவலன் மதுரை மாவட்ட 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

MURDER, MADURAI