'என்னது ஸ்டாலின் தான் அடுத்த முதல்வரா'?... 'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பன்ச்'... தேர்தல் பரப்புரையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நான் என்றைக்கும் முதல்வர் என்று நினைப்பது கிடையாது. மக்கள்தான் முதல்வர்கள், என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தனது 3-ம் கட்ட தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை இன்று கரூரில் தொடங்கி வருகிற 26-ந்தேதி வரை முதல்வர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் கரூரில் இன்று காலை கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் மனோகரா ரவுண்டானாவில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், ''கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எளிமையானவர். ஒரு வீட்டில், ஒரு குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனிக்கக் கூடியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகப்பெரிய இலாகாவான போக்குவரத்துத் துறையை வழங்கி, அதன் மூலம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
அனைவரையும் மதிக்கக் கூடிய சிறந்த வேட்பாளர். அவருக்கு இரட்டை இலையில் வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தாருங்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்த தலைவர்கள். நசுக்கப்பட்ட ஏழை, எளிய கடைக்கோடி மக்களின் வாழ்க்கை ஏற்றத்திற்காகப் பாடுபட்டார்கள். கண்ணை இமை காப்பது போல மறைந்த முதல்வர் ஜெயலலிதா திட்டங்களை வாரி வாரி வழங்கியதால் இன்றைக்கு இந்தியாவில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்கிறது.
தி.மு.கவை பொறுத்தவரை அந்த கட்சி என்பது ஒரு குடும்ப கட்சி, அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. யார் வேண்டுமானாலும், பங்குதாரராகச் சேர்ந்து கொள்ளலாம். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் எனப் பேசிக் கொண்டு வருகிறார். ஆனால் நான் முதலமைச்சர் ஆவேன் எனக் கனவு தான் காண முடியுமே தவிர முதலமைச்சர் ஆக முடியாது என அதிரடியாகப் பேசினார்.
கரூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் அம்மா சாலை ரூ.21 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியகுளத்துப்பாளையம், பசுபதி பாளையம் போன்ற இடங்களில் குகை வழிப் பாதைகள் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டது. சென்னையில் எனது தலைமையில் ரூ.3 லட்சத்து 500 கோடியில் 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் முடியும் தருவாயில் நேரடியாக 5 லட்சம் இளைஞர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் இளைஞர்களுக்கும் என 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆட்சியில் இல்லாத போதே ஸ்டாலினும், உதயநிதியும் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளும், மக்களும் படாதபாடு படுவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் நாட்டை ஆள நினைக்கலாமா? தி.மு.க என்றால் அராஜகம், கட்டப்பஞ்சாயத்துக் கட்சி என்பது அனைவருக்கும் தெரியும்'' என முதல்வர் தனது பரப்புரையில் பேசினார்.
மற்ற செய்திகள்