'ஸ்டாலின் சொன்ன பச்சை பொய்'...'தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியே எடப்பாடி தான்'... முதல்வர் பெருமிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய முதல்வர், ''மு.க.ஸ்டாலின் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இந்த எடப்பாடியில் பேசும்போது, இந்த தொகுதிக்கு எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்று ஒரு பச்சைப் பொய்யைக் கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் 2011-ம் ஆண்டுக்கு முன்பு இந்த தொகுதியில் சாலை வசதி எப்படி இருந்தது? தற்போது எவ்வாறு உள்ளது? என்பதைப் பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
2011-ம் ஆண்டு வாக்கு சேகரிக்கும் போது, எங்களுக்குக் காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை நிறைவேற்றி மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தினேன். நெசவாளர்கள் நிறைந்த பகுதியான இங்கிருந்து பெங்களூருவுக்குச் செல்ல பஸ் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையினை ஏற்று சேலம், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி வழியாகப் பெங்களூருவுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதேபோல நங்கவள்ளியில் இருந்து கோயம்புத்தூருக்கு பஸ் இயக்கப்படுகிறது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி முதல்-அமைச்சரின் தொகுதி. நான் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். மாதம் இருமுறை எடப்பாடி தொகுதிக்கு வந்து உங்களைச் சந்திக்கிறேன். பல்வேறு திட்டங்களை இந்த தொகுதியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் திண்ணையில் பெட்ஷீட் விரித்து அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. மக்களின் குறைகளைக் கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
உயிர் முக்கியம். இன்றைக்கு விலையில்லாமல் தடுப்பூசியினை ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். நான் போட்டுக் கொண்டேன். ஆகவே இளைஞர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு நலமோடு, வளமோடு வாழவேண்டும்.'' என முதல்வர் தனது பரப்புரையில் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்