‘இனி சென்னைக்குள்ள அவசியம் இல்லாம சுத்த முடியாது’!.. காவல்துறை ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் செல்வதற்கும் இனி இ-பதிவு அவசியம் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் நடமாடியதால், இதனை தடுக்க கடந்த 15-ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. இதனால் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்திருந்த கடைகளுக்கான நேரம், காலை 10 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்கும் என குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த இ-பதிவு முறை நேற்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. இ-பதிவு முறையின்படி தனியாக பாஸ் வாங்க வேண்டியது இல்லை. தாங்கள் செல்போனில் இ-பதிவுக்காக பதிவு செய்து இருக்கும் தகவல்களை காட்டினாலே போதுமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவசர பயணத்துக்காக செல்பவர்கள் கட்டாயம் இ-பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் இ-பதிவு பெறாமல் யாராவது வாகனங்களில் வெளியில் சுற்றினால், அவர்களது வாகனங்கள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் பொதுமக்கள் தங்கள் சரக காவல்நிலைய எல்லைக்கு வெளியே செல்வதற்கும் இ-பதிவு அவசியம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் அறிவுரைப்படி, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர். அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் உரிய இ-பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் இ-பதிவு இல்லாமல் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்