"நீங்களே காலி பண்ணிடுவீங்க போல.. டாக்டர் சீக்கிரம் பேசி முடிங்க.. துரைமுருகன் தடாலடி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் விலக்கு மசோதா தொடர்பாக நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் பேச்சுக்கு துரைமுருகன் இடைமறித்து பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நீட் என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது? நீட் என்பதை அறிமுகம் செய்தது யார்?" என்று கேள்வி எழுப்பினார். பின்பு காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஆணையை சுட்டிக்காட்டினார். அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை எதிர்ப்பு தெரிவித்தார். விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கூச்சலிட்டதால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திமுக நீட் ஆதரவாக இருப்பதை போன்ற தோற்றத்தை வெளியில் சிலர் உருவாக்கி வைத்துள்ளனர். அதனை விளக்க வேண்டிய கடமை அதிமுகவுக்கு இருக்கிறது" என்று கூறினார். அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, "விஜயபாஸ்கர் பேசிய அனைத்தும் அவை குறிப்பில் இருக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லை, நீங்கள் அமரலாம்" என்றார். அவரது பேச்சுக்கு மரியாதை கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியும் அமர்ந்தார்.
பின்னர், சபாநாயகர் விஜயபாஸ்கரை பேச அழைத்தபோது, "டாக்டர்... இதை மட்டும் பேசி முடிங்க, நீங்கதான் சொன்னீர்கள், 1984ல் நுழைவுத் தேர்வு வந்தது என்று, அதன் பிறகு நீட் மத்திய அரசு கொண்டு வந்ததாக கூறினீர்கள்" என்று சபாநாயகர் தெரிவித்தார். அவரை பேசவிடாமல் குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் "நீங்களே... காலி பண்ணிடுவீங்க போலேயே" என சபாநாயகரை கேட்க, தனது பேச்சை அப்பாவு முடித்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் விஜயபாஸ்கரிடம், "டாக்டர் போதும் நல்லா பேசுனீங்க, கிளீனா பேசுனீங்க, பலமுறை பாராட்டியிருக்கேன்.. இதோட முடிங்க" என கேட்டுக் கொண்டார்.
அதன் பின், மீண்டும் விஜயபாஸ்கரை பேச அழைத்த சபாநாயகர், "ஆளுநர் திருப்பி அனுப்பியதை மட்டும் பேசுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று மீண்டும் விஜயபாஸ்கர் தனது பேச்சை தொடர்ந்தார்.
மற்ற செய்திகள்