கொட்டித்தீர்க்கும் கனமழை.. தமிழகத்தில் இன்றும் ரெட் அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை காரணமாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை வரை கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சத்திருக்கிறது.
Also Read | தமிழகத்தில் ரெட் அலெர்ட்.. நாளைக்கும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தென்மேற்கு பருவமழை
ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தற்போது அதிகரித்திருக்கிறது.
5 மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று ஊட்டியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
அப்போது பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 2 தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ஒரு தமிழக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து நிவாரண முகாம்களும் அங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read | பட்டமளிப்பு விழாவுக்காக மேடை ஏறிய வாலிபர்.. அரங்கில் கேட்ட திடீர் சத்தம்.. "என்ன ஒரு 'நெகிழ்ச்சி' மொமெண்ட்"
மற்ற செய்திகள்