கடைசியா 'அந்த' எடத்துல பாத்தோம்... இளைஞரின் 'மர்ம' மரணத்தால் உறைந்து போன கரூர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் மங்காசோலிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே முன்பு கல் குவாரியாக செயல்பட்ட பகுதி ஒன்று தற்போது பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் பெரிய குழியான பகுதியாக மாறியுள்ளது.
சுமார் ஐம்பதடி ஆழமுள்ள இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில், அந்த பகுதியை மது அருந்துபவர்கள் மட்டும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பாறை குழிக்குள் உள்ள தண்ணீரில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பெயரில், போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். பாறை குழிக்குள் கிடந்த இளைஞரின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மேலே தூக்கி வந்தனர். அந்த இளைஞர் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி வேலுச்சாமி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வேலுச்சாமி தனது நண்பர்கள் 4 பேருடன் அந்த பாறைக்குழி அருகே மது அருந்த சென்றதாக தெரிகிறது. 'நாங்கள் மது அருந்திக் கொண்டிருக்கும் போது வேலுச்சாமி தவறுதலாக பாறைக்குழிக்குள் விழுந்து விட்டார். நாங்களும் போதையில் இருந்ததன் காரணத்தால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது விபத்து தான்' என போலீசாரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதும் இவர்களை தூரத்தில் இருந்து இரவு நேரத்தில் பார்த்த சிலர், அவர்கள் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சேர்ந்து வேலுச்சாமியை கொலை செய்தனரா, இல்லை கால் தவறி வேலுச்சாமி குழிக்குள் விழுந்து இறந்தாரா என்பது குறித்து அவரின் நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.