Mayilsamy : "மயில்சாமி அழைப்பின்பேரில் வாசிச்சேன்... ஃபேமிலிய டிராப் பண்ணிட்டு அடுத்த கோயிலுக்கு போலாம்னு சொன்னார்.." - இறப்புக்கு முன்வரை நடந்தது என்ன.? உடைக்கும் டிரம்ஸ் சிவமணி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், டிரம்ஸ் சிவமணி மயில்சாமியுடனான கடைசி தருணங்கள் குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.
"என்னுடைய நீண்ட கால நண்பர் நடிகர் மயில்சாமி. நேற்று கூட என்னுடைய போட்டோவை பார்த்துவிட்டு 'ஐயா கலைஞர் கருணாநிதி போல் இருக்கீங்க' என்றார். இதேபோல் இன்னொரு போட்டோவை அனுப்பவும் சொன்னார். தீவிர சிவபக்தரான மயில்சாமி என்னை முதல்முறை சிவராத்திரியின் போது தான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிரம்ஸ் வாசிக்க வைத்தார்.
அப்போதிருந்து ஒவ்வொரு சிவன் கோயிலிலும் மகா சிவராத்திரி கச்சேரி செய்து வருகிறேன். நேற்றிரவு எனக்கு போன் செய்த மயில்சாமி, "நான் திருவண்ணாமலை கோயிலுக்கு போகலை. கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு போறேன்னு சொன்னார். என்னையும் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு வர சொன்னார். நானும் அவரும் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றிருந்தோம். சிவராத்திரி முழுவதும் இசைக்கச்சேரி நடத்தினோம். மயில்சாமியும் மைக்கில் சாமி பாடல்களை பாடினார்.
பின்னர், நான் 5 ஆம் கால பூஜைக்கு திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலுக்கு போகிறேன் என்று கூறினேன். குடும்பத்தை வீட்டில் விட்டு நானும் கோயிலுக்கு வர்றேன் என்று கூறினார். கொஞ்ச நேரம் கழித்து மயில்சாமி அலைபேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. "அடுத்து எந்த கோயிலுக்கு செல்லனும், எங்கு வாசிக்கனும் என கேட்டேன்". மறுமுனையில் அவருடைய மகன் அழுதார். மயில்சாமி மரணம் குறித்த தகவலை எனக்கு சொன்னார். மஹா சிவராத்திரி அன்று மயில்சாமி சிவபதம் அடைந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறினார்.
மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்திருக்கிறேன் என்ற மயில்சாமி, அவருடைய ஒரு ஆசை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வர வேண்டும். சிவலிங்கத்திற்கு ரஜினிகாந்த் கைகளால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என மயில்சாமி தன்னிடம் கூறியதாக சிவமணி பேட்டியில் பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்